சேயா சதெவ்மி படுகொலை: பிரதான சந்தேகநபர் DNA பரிசோதனைக்காக கொழும்பிற்கு​ அழைத்துவரப்பட்டார்

சேயா சதெவ்மி படுகொலை: பிரதான சந்தேகநபர் DNA பரிசோதனைக்காக கொழும்பிற்கு​ அழைத்துவரப்பட்டார்

சேயா சதெவ்மி படுகொலை: பிரதான சந்தேகநபர் DNA பரிசோதனைக்காக கொழும்பிற்கு​ அழைத்துவரப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

28 Sep, 2015 | 7:30 pm

சேயா சதெவ்மி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதாகியுள்ள பிரதான சந்தேகநபர் DNA பரிசோதணைக்காக இன்று கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார்.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சந்தேகநபர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார்.

பொரெல்லையில் அமைந்துள்ள ஜின்டெக் நிறுவனத்தில் குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் சந்தேகநபர் அழைத்து செல்லப்பட்டார் .
இது தொடர்பில் ஜின்டெக் நிறுவனம் கலாநிதி ருவன் .ஜே.இலேபெரும தெரிவிக்கையில்…

[quote]நீதிமன்றின் உத்தரவிற்கு அமைவாக சம்பவத்தின் சந்தேகநபரின் இரத்த மாதிரி எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் டீ.என்.ஏ பரிசோதணைகள் முன்னெடுக்கப்படுகின்றது[/quote]

இதேவேளை , சிறுமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவன் மற்றும் 33 வயதுடைய நபரும் இன்று (28) மீனுவன்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களின் DNA அறிக்கை கிடைக்கப்பெறாமையினால் அவர்களுக்கு பிணை வழங்க முடியாது என பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இதேவேளை , குறித்த மாணவன் சார்பில் அந்த பாடசாலையின் பழைய மாணவர், சட்டதரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டில் இந்த மாணவன் கல்வி பொதுத் தராதர சாதராண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள நிலையில் பொலிஸ் கைதில் உள்ளமையினால் பெரிதும் அவமானப்பட்டுள்ளதாக சட்டதரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்கள்.

எவ்வித குற்றமும் அற்ற இவ்வாறான ஒருவர் கைதாகியுள்ளமையினால், சமூகத்தின் ஏனைய பிரஜைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக சட்டதரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மடிக்கணணியில் ஆபாச காட்சிகள் இருந்தமைக்காக ஒருவருக்கு கொலை குற்றம் சுமத்துவது நியாயம் இல்லை எனவும் அந்த சட்டதரணிகள் சுட்டிக்காட்டினார்கள்.

மாணவன் பொலிஸ் கைதில் இருந்த சந்தர்ப்பத்தில் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள சட்டதரணிகள் , சந்தேகநபரை சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இதற்கு அனுமதி வழங்கிய நீதவான் ,அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

நள்ளிரவில் வீடு வருவதாகவும் , தகுதியற்ற சிலருடன் தொடர்பு வைத்துள்ளார் என்று தாய் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் மாணவனை கைது செய்ததாக கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதன் போது தெரிவித்தார்.

கொலை இடம்பெற்றதன் பின்னர் மற்ற சந்தேகநபர் மீசை மற்றும் தலை முடி வடிவமைப்பை மாற்றியமை அவரை கைது செய்ய காரணமாகியது என்றும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்