சேயா சதெவ்மி கொலைச் சம்பவம்: சந்தேகநபர் வழமைக்கு மாறான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்!

சேயா சதெவ்மி கொலைச் சம்பவம்: சந்தேகநபர் வழமைக்கு மாறான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்!

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2015 | 9:40 pm

கொட்டதெனியாவ, சேயா சதெவ்மி கொலைச் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரினால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு அமைய, அவரை பிரதான சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.

கம்பஹா, பெம்முல்ல, பத்துவத்துகொட பகுதியில் மறைந்திருந்த சந்தேகநபர் நேற்றைய தினம் விசேட விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் குறித்து பெண் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்ற வேளையில், அங்கிருந்து அவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

30 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் வழமைக்கு மாறான பழக்கவழக்கங்களைக் கொண்ட நபர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

வேறொரு வழக்கு காரணமாக இந்த நபர் பெம்முல்லயிலிருந்து தப்பிச்சென்று கொட்டதெனியாவ – இங்கம்மாருவ பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் சில காலம் தங்கியுள்ளார்.

அந்த வீட்டிலிருந்து சேயா சதெவ்மியின் வீடு சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது.

சிறுமியின் வீட்டிற்கு அருகில் சந்தேகநபர் அடிக்கடி சென்று வந்திருக்கலாம் என பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இக்கொலையின் பின்னர் சந்தேகநபர் இங்கம்மாருவ பகுதியிலிருந்து மீண்டும் பத்துவத்துகொட பகுதிக்குத் தப்பிச் சென்று அங்கு சிறிது காலம் தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவையில் பாடசாலை மாணவர் ஒருவரும், மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் சட்ட வைத்திய அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதை அறிந்த பிரதேசவாசிகள் சேயா சதெவ்மியின் வீட்டிற்கு இன்று முற்பகல் முதல் வருகை தந்த வண்ணமுள்ளனர்.

அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாது பிரதேசவாசிகள் அங்கு நின்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்