யாழ். நீதிமன்ற கட்டடத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான மூவர் சரீரப் பிணையில் விடுதலை

யாழ். நீதிமன்ற கட்டடத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான மூவர் சரீரப் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2015 | 4:58 pm

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் மூவர் இன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 சந்தேகநபர்கள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களில் மூவருக்கு சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தலா ஐந்து சரீரப் பிணையில் மூன்று சந்தேகநபர்களையும் விடுவிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூன்று பேரும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஏனைய 17 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சந்தேகநபரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புங்குடுதீவு பகுதியில் மாணவி வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து கட்டம் கட்டமாக சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்