அவன்கார்ட் தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

அவன்கார்ட் தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2015 | 10:16 pm

அவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் எவ்வித தலையீடுகளும் இன்றி சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்

யாருடைய தலையீடும் இன்றி சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கட்சியின் பிரதானிகளது கூட்டத்தின் போது உத்தரவிட்டதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையுடனான மஹநுவர கப்பல், துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

துறைமுகத்திற்கு பிரவேசிக்கும் சாதாரண கப்பலொன்றைப் போன்று செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மஹநுவர கப்பலிலுள்ள ஆயுதங்கள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையினால், தமக்குக் கருத்து தெரிவிக்க முடியாது என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அவன்கார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையொன்று காலி துறைமுகத்தில் மஹநுவர கப்பலில் இருந்தமை தொடர்பில் அதிகம் பேசப்பட்ட போதிலும், மேலும் இரண்டு கப்பல்களும் அந்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலைகளும் செங்கடல் மற்றும் ஓமன் வளைகுடாவில் நங்கூரமிட்டுள்ளதாக அவன்கார்ட் நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது நிறுவனம் ரக்னா லங்கா நிறுவனத்துடன் ஒன்றிணைந்து கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமாக அவன்கார்ட் நிறுவனத்தின் இணையத்தளத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்ட விதிகளுக்கு அப்பாற்சென்று, ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் பதிவு செய்துள்ளார்.

இதன்பிரகாரம், ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3473 ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும், அவற்றில் 89 ஆயுதங்கள் மாத்திரமே சட்டவிதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்