இலங்கையில் ஊடகவியாளர்கள் கொலை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?

இலங்கையில் ஊடகவியாளர்கள் கொலை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 10:15 am

சமூகத்தில் இடம்பெறும் அநீதிகளுக்கு அச்சமில்லாமல், ஆயுதங்களுக்கு முன்னாள் பேனாவை ஆயுதமாக்கி மக்களுக்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் துணிந்த தைரியசாலிகளே ஊடகவியலாளர்கள்.

இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலின் காரணத்தினால் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஊடகவியலாளர்களின் வாழ்க்கை எத்தகைய சவாலுடையது என்பதற்கு சான்று பயிர்கின்றது.

ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் கலாசாரமானது 2000 ஆம் ஆண்டு காலப்பகஞுதியில் வேரிட ஆரம்பித்தது.

போர்ச்சூழல் போன்ற இக்கட்டு மிகுந்த காலகட்டத்தில் மக்களின் பிரச்சினை ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்கு கொண்டுவந்த சிறந்த செய்தியாளராக விளங்கிய நிமலராஜன் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி யாழ் நகரிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்ததாக பத்திரிகையாளராக மத்திரமன்றி சிறந்த எழுத்தாளர் என்ற வகையில்   சமூகத்திற்கு தேவையான பல நூல்களையும் எழுதியுள்ள ஐயாத்துரை நடேசன் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில்  சுட்டுக் கொல்லப்பட்டார்.

எனினும் உயிர் பறிக்கும் கலாசார் அத்துடன் நின்று விடவில்லை. 

தராகி என்ற புனைபெயருடன் ஊடகங்களில் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்திய தர்மரத்தினம் சிவராம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் பாராளுமன்றத்திற்கு அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தராகி 1989 ஆம் ஆண்டு ஆங்கிலக்கட்டுரையுடன் தனது ஊடகப்பணியை ஆரம்பித்த தர்மரத்தினம் சிவராம் அதனைத் தொடர்ந்து அரசியல், போரியியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கட்டுரைகள் பலவற்றை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிட்டார்.

எனினும் தராகியின் எழுத்தாற்றலுக்கு ஈடுகொடுக்க முடியாத கயவர்களினாலேயே அவரின் உயிர் பறிக்கப்பட்டது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

மேலும் ஊடகவியலாளர் ரேலங்கி செல்வராஜாவும், அவரது கணவரும் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி  பம்பலப்பிட்டியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன், ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து சட்டுக் கொல்லப்பட்டார். அத்துடன் ஊடகப்பணியாளர்களான கண்ணமுத்து அரசகுமார், டீ.செல்வரட்ணம், யோககுமார் கிருஷ்ணபிள்ளை மற்றும் கே.நவரட்ணம் ஆகியோர் 2005 ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்டனர்.

மேலும் தொடர்ந்த கொலைக் கலாசாரத்தின் விழுதுகளாக மேலும் பலரும் மண்ணிற்குள் விதைக்கப்பட்டனர்.

அதற்கு சான்று பகிர்வதாக ஊடகவியலாளர்களான சுரேஸ் குமார் மற்றும் ரஞ்ஜித் குமார் ஆகியோர் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை நிறுவனத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதி ஊடகவியலாளர் லக்மால் டி சில்வா தெஹிவலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலப்பணியாளர்களான எம்.மனோஜன்ராஜ் மற்றும் சதாசிவம் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டனர்.

ஊடகவியலாளர் சின்னத்தம்பி சிவமகாராஜா 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி யாழ் தெல்லிப்பளையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொலைசெய்யப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன் வவுனியாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர் செல்வராஜா ரஜீவர்மன் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி யாழ் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கலாச்சாரம் பல்கலைக்கழக மாணவனையும் பலியெடுத்திலருந்தமை வருந்தத்தக்க விடயம்.
யாழ் பல்கலைக்கழக ஊடகவியல் கற்கை மாணவனும், சுயாதீனா ஊடகவியலாளருமாகிய சகாதேவன் நிலக்ஸன் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி யாழ் – கொக்குவிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அத்துடன் ஊடகப்பணியாளர்களான சுப்பிரமணியம் இராமச்சந்திரன், வடிவேல் நிமலராஜ், சுரேஸ் லிம்பியோ மற்றும் ரி.தர்மலிங்கம் ஆகியோர் 2007 ஆம் ஆண்டு கொலை செய்யபட்டனர்.

நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி யாழ் கல்லுண்டாய் வெளியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் திறம்பட செயற்பட்ட ஊடகப்போரளி தேவகுமாரின் உயிர் சமூகவிரோதிகளினால் பறிக்கப்பட்டது.

இறுதியாக சிரேஷ்ட ஊடகவியலாளராகவும்  மனித நேய செயற்பாட்டாளராகவும் விளங்கிய லசந்த விக்ரமதுங்க பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் குரல் 2009 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி கொழும்பு – கல்கிஸையில் நெரிக்கப்பட்டது.

லசந்த விக்ரமதுங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பி தமது பேனையைக் கொண்டு போராடிய தைரியமிகு ஊடகவியலாளர் ஆவார்.

ஜனாநாயகத்திற்காக உயிர்துறந்த ஊடகவியலாளர்களின் கொலைகளின் சூத்திரதாரிகள் தண்டிக்கபடாமை நாட்டின் ஜனநாயகத்திற்கு கேள்விக்குறியாக்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்