மரண தண்டனை விதிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம் 

மரண தண்டனை விதிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம் 

மரண தண்டனை விதிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம் 

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 5:28 pm

கடுமையான குற்றங்கள் இழைத்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுயமாக தீர்மானமொன்றைத் தம்மால் மேற்கொள்ள முடியும் என்ற போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறியத் தாம் விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சேயா என்ற சிறுமியின் கொலை உட்பட கடந்த வருடத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறு தமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக ஐனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தார்மீகப் பண்புகளை மதிக்கின்ற தலைவர் என்ற வகையில் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் இடம்பெறுகின்ற பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் கொள்ளை மற்றும் கொலை உள்ளிட்ட அனைத்து விதமான குற்றங்கள் தொடர்பிலும் புதிய சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் தனது அரசியல் வாழ்க்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, போதையற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கு தாம் முழு வீச்சுடன் செயற்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

காலி நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற போதைப்பொருள் எதிர்பு தேசிய வேலைத்திட்டத்தில் இரண்டாம் கட்ட நிகழ்வில் இன்று கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயங்களைத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்