ஐ.நா வின் விசாரணை அறிக்கையையும் பரிந்துரையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது

ஐ.நா வின் விசாரணை அறிக்கையையும் பரிந்துரையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

17 Sep, 2015 | 8:28 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இதேவேளை, கடந்த காலத்தில் தமது சொந்த குறைபாடுகளையும் நினைவுகூர்ந்தபடி, தங்களின் பெயரால் பிறருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி எண்ணிப் பார்க்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சுமார் 9 ஆண்டுகாலமாக மனிதத்திற்கு எதிராக பாரிய குற்றங்களை இழைத்து வந்தவர்கள் மீது வழக்குத் தொடுக்க சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளைக் கொண்டதொரு விசேட
நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை மிக முக்கியமானதாகும் என அறிக்கையொன்றின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு விசாரணை நடைபெற வேண்டுமென நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வந்துள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளமை மிகுந்த
நம்பிக்கையை அளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் மற்றும் பக்கசார்பற்ற விதத்தில் நியாயம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பெரிதும்
வரவேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஐ.நா வின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகளையும், குறிப்பாக இலங்கை அரசாங்கத்தைத் தாம் கேட்டுக்கொள்வதாக தமது அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காக ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை ஏற்பதுடன், சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான
மனோபாவத்தை அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும் என்றும் கூட்டமைப்பின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அநியாயம் இழைக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் ஆறுதல் கிடைக்கும் விதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் ஒத்துழைத்து செயற்படுவதன் ஊடாகவே பிரகாசமானதொரு
எதிர்காலத்தை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்த முடியும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தன்மானத்தோடும், கண்ணியத்தோடும், சம உரிமையுள்ள பிரஜைகளாக தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கான நல்லதொரு சூழலை உருவாக்குவது சாத்தியமாகும் என திடமாக நம்புவதாகவும் தமதறிக்கையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தருணத்தில் தமக்குள்ள பொறுப்பை நிறைவேற்றும் நோக்கில் தமிழ் மக்களை வழிநடத்துவதற்குத் தயாராக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்