உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – மங்கள

உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – மங்கள

எழுத்தாளர் Bella Dalima

17 Sep, 2015 | 4:09 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நேற்று (16) வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.

நான்கு பிரிவுகளைக் கொண்ட உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றினூடாக மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

உண்மையைக் கண்டறிவதற்காக அரசியலமைப்பின் ஊடாக இரண்டு பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட யோசனைகளை அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கலப்பு நீதிமன்றமா அல்லது வேறு முறையிலா தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசியல் ரீதியான தீர்வொன்றிற்கு செல்லவேண்டும் எனவும், அது பிளவுபடாத நாட்டிற்குள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்துகொண்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாதெனவும், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருடைய யோசனைகளையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப் போன்ற விடயங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் எனவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விசேட அலுவலகமொன்றை அரசாங்கத்தினால் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்