தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஐவரடங்கிய குழு நியமனம்

தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஐவரடங்கிய குழு நியமனம்

தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஐவரடங்கிய குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

29 Aug, 2015 | 9:50 am

தேசிய அரசாங்கத்தில் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டிய விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (28) கூடியபோதே இந்த குழு நியமிக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

தாம் உட்பட எஸ்.பி. திசாநாயக்க, கலாநிதி சரத் அமுனுகம, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இந்த குழுவில் அடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதன் ஊடாக நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்வதற்கான வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதே இந்தக் குழுவின் எதிர்பார்ப்பாகும் என்றும் துமிந்த திசாநாயக்க கூறினார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் உட்பட பாராளுமன்றத்தின் சகல பதவிகள் தொடர்பிலும் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தீர்மானம் மேற்கொள்வதற்கான பூரண அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

கட்சியின் 64 ஆவது பூர்த்தி விழா ஏற்பாடுகள் மற்றும் நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்தும் மத்திய செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்