நீரின்றித் தவிக்கும் மட்டக்களப்பு: வரட்சியால் சுமார் 20,000 குடும்பங்கள் பாதிப்பு

நீரின்றித் தவிக்கும் மட்டக்களப்பு: வரட்சியால் சுமார் 20,000 குடும்பங்கள் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Aug, 2015 | 7:15 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் சுமார் 20,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடும் வெப்பத்துடன் கூடிய வானிலையால், அங்கு நீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்போதும் நீருக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

கிணறுகள் வற்றியுள்ளதுடன், மட்டக்களப்பிலுள்ள பல குளங்களின் நீர் மட்டமும் குறைவடைந்துள்ளது.

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பல மைல் தொலைவிற்குச் சென்று நீரைக் கொண்டு வருவதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஆயித்தியமலை, உன்னிச்சை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் வழமையாகவே குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும். தற்போது அதிக வெப்பத்துடன் கூடிய நிலைமை தோன்றியுள்ளமையினால் அதிக வரட்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

குளங்களுக்கு அருகில் கிடங்குகளைத் தோண்டி தமது தேவைக்கான நீரை அந்த பிரதேச மக்கள் பெற்றுக் கொள்வதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, உன்னிச்சைக்குளத்திலிருந்து குழாய் மூலம் மட்டக்களப்பு நகருக்கு நீர் விநியோகிக்கப்படுவதாகவும், ஆனால் உன்னிச்சை பகுதிக்கு நீர் விநியோகிக்கப்படுவதில்லை எனவும் அந்த பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியுடனான நிலைமை குறித்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இதன்போது, 91 கிராம சேவையாளர் பிரிவுகளில் 20 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் வசதியைக் கோரி நிற்பதாகவும் அவர்களுக்கான நீர் விநியோகத்தை பிரதேச சபைகள் மூலம் வழங்குவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

மேலும், இதற்காக 6 மில்லியன் ரூபா நிதியுதவியைத் தாம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்