ஐ.ம.சு.கூ 113 ஆசனங்களைக் கைப்பற்றுமாயின் சிரேஷ்ட தலைவர் ஒருவருக்கே பிரதமர் பதவி – ஜனாதிபதி

ஐ.ம.சு.கூ 113 ஆசனங்களைக் கைப்பற்றுமாயின் சிரேஷ்ட தலைவர் ஒருவருக்கே பிரதமர் பதவி – ஜனாதிபதி

ஐ.ம.சு.கூ 113 ஆசனங்களைக் கைப்பற்றுமாயின் சிரேஷ்ட தலைவர் ஒருவருக்கே பிரதமர் பதவி – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

13 Aug, 2015 | 10:07 pm

பொதுத்தேர்தலில் அரசாங்கமொன்றை அமைப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச ஆசனங்களின் எண்ணிக்கையான 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றுமாயின், இதுவரை சந்தர்ப்பம் கிடைத்திராத ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார்.

ஒருவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் தேவையான ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல், அந்த எண்ணிக்கையை அண்மித்த ஆசனங்களைப் பெற்றுக்கொண்டால் அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான எஞ்சிய ஆசனங்களைப் பெறுவதற்காக ஜனாதிபதி என்ற வகையில் தாம் தலையிட முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஸ அல்லாமல், கட்சியின் வேறு சிரேஷ்ட தலைவர் ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியை வகிக்கக்கூடிய நேர்மையான, அரசியல் முதிர்ச்சியுடைய, தூரநோக்குடைய பல தலைவர்களைக் கொண்டுள்ள இந்த நாட்டின் தொலைநோக்கு கொண்ட அரசியல் கட்சியாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திகழ்வதாகவும் ஜனாதிபதி தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, சமல் ராஜபக்ஸ, அத்தாவுத செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌஸி, சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா போன்ற சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரை இந்த பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஸ ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பொருட்டு, தமது நெகிழ்வுத் தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் ஆசிர்வாதத்தை மக்கள் மத்தியில் பிரதிபலிக்குமாறும் நாட்டினதும், நாட்டு மக்களினதும், கட்சியினதும் பெயரால் மஹிந்த ராஜபக்ஸவிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியினதும், நாட்டினதும் நலனுக்காக எதிர்வரும் பொதுத்தேர்த​ல் தினம் வரை சிந்தித்து செயற்படுமாறும், இனவாதத்தைப் பரப்புகின்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் எனவும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்சியினுள் பிளவுகள் ஏற்படுவதற்கு இடமாளிக்காது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றிகொள்வதற்கு வழியேற்படுத்தும் வகையில் செயற்படுமாறும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு தசாப்தங்களாக 4 ஜனாதிபதித் தேர்தல்கள், 4 பொதுத்தேர்தல்களில் வெற்றியீட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு கடந்த ஜனவரி 8 ஆம் திகதி தோல்வியடைந்து 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இந்தக் கடிதத்தை அனுப்பிவைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் அரசியலில் பிரவேசித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியூடாகவே தேசிய அரசியலில் காலடி வைத்ததாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ள வாக்காளர்களின் உதவியால் மஹிந்த ராஜபக்ஸ 2 தடவைகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானதாகவும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நாடு முழுவதும் உருவெடுத்த மக்கள் கருத்துக்கு தலைமை ஏற்று கைநழுவ இருந்த ஜனாதிபதிப் பதவியை கட்சிக்குள் நிலைநிறுத்தியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி 8 ஆம் திகதி தோல்விக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்கள் 1977 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளைப் போன்று கசப்பான அனுபவங்களைப் பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமையே இதற்குக் காரணமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து விதமான வன்முறைகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகும் வரை அவரது பயணத்தில் இருந்த தீர்மானமிக்க சந்தர்ப்பங்களில் தாம் முன்னின்ற விதத்தை மறக்க முடியுமா என வினவியுள்ள ஜனாதிபதி, 2004 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு தாம் மேற்கொண்ட முயற்சி மறக்கக்கூடிய ஒன்றல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தடுப்பதற்கு முழு வலுவையும் பயன்படுத்தி விமல் வீரவங்ச முன்னெடுத்த நடவடிக்கைக்கு எதிராக தாம் மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்ததாகவும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நியமிப்பது தொடர்பான பிரச்சினையின்போது மஹிந்த ராஜபக்ஸ சார்பில் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று கட்சியின் செயலாளராக இருந்த தாம் அவ்வாறு செயற்பட்டபோதிலும் இன்று மஹிந்த ராஜபக்ஸவின் நிழலில் இருக்கும் அநேகமானவர்கள் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்ற பின்னர் உருவாகும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேரம் பேசி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான நீண்டகால அரசியல் நட்புறவு சீர்குலைய பசில் ராஜபக்ஸவின் முறையற்ற செயற்பாடுகளும் நடத்தைகளும் காரணமாக அமைந்தது என்பதை மஹிந்த ராஜபக்ஸ நன்கு அறிவார் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தம்மை அரசியலில் இருந்து நீக்குவதற்கு அவர் முயற்சித்தாலும் அது பலனளிக்கவில்லை என மைத்திரிபால சிறிசேன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் தமது சுயாதீனத்தைப் பாதுகாக்கும் அளவிற்கு மஹிந்த ராஜபக்ஸ நேர்மையாக செயற்படுவார் என எதிர்பார்த்தபோதிலும் பொது வேட்பாளராக நியமிக்கப்படும் வரை அவர் அவ்வாறு செயற்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 7 மாதங்களாக இருவரும் சந்தித்த சந்தர்ப்பங்களில் குருணாகல் மாவட்ட வேட்புமனுவை கைச்சாத்திடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ போட்டியிடக்கூடாது என தாம் வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலை வழிநடாத்தி வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பை தாம் ஏற்று செயற்படவிருந்தமையே இதற்கான காரணமென ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மஹிந்த ராஜபக்ஸ பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவில் கைச்சாத்திட்டதை அடுத்து தமது எதிர்பார்ப்பு தகர்ந்ததாகவும் அவ்வாறு இடம்பெற்றிருக்காவிட்டால் தமது வெற்றிக்கு அர்ப்பணிப்பு செய்த அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை மீளவும் கட்சிக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தலைமை ஏற்று செயற்படுவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்ஸவை முற்றாக அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டிய தேவை தமக்கு இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன, அவரது கௌரவமான இருப்பை உறுதிப்படுத்தும் வகையில் தகுந்த அரசியல் அமைப்பு ஒதுக்கீட்டினை முன்மொழிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த அநேகமானவர்கள் இணங்கியிருந்தமையை தாம் அறிந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிறு குழுக்கள் மற்றும் அமைப்புக்கள் மஹிந்த ராஜபக்ஸவின் உதவியால் பாராளுமன்ற ஆசனத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே செயற்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்