தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் குறித்து 350 பேர் கைது

தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் குறித்து 350 பேர் கைது

தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் குறித்து 350 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2015 | 1:01 pm

பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் குறித்து சந்தேகநபர்கள் 350 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது

தேர்தல் சட்டமீறல்கள் குறித்து இதுவரை 268 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய 892 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன.

சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் போன்ற சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்கும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் 166 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பொதுத்தேர்தலின் பிரசார நவடிக்​கைகளின் போதான சுவரொட்டிகள்
மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தும் சம்பவங்கள் குறித்து 190 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன.

பொருட்களை பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும் 124 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அரச சொத்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக 106 முறைப்பாடுகளும், அரசாங்க ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் 93 சம்பவங்களும் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன.

தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் குறித்து கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான 167 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதுதவிர மாத்தறை மாவட்டத்தில் 54 முறைப்பாடுகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 50 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 51 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்