மன்னார் மனிதப் புதைகுழியை அண்மித்த கிணறு இயந்திரங்களின்றி சுத்திகரிப்பு

மன்னார் மனிதப் புதைகுழியை அண்மித்த கிணறு இயந்திரங்களின்றி சுத்திகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2015 | 9:12 pm

மன்னார் மனிதப் புதைகுழி அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கிணற்றை அண்மித்த பகுதி இன்று சுத்திகரிக்கப்பட்டது.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைய இன்று சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இயந்திரத்தினைப் பாவிக்காது மனித வலுவை மாத்திரம் பயன்படுத்தி சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கமைய, சந்தேகத்திற்கிடமான கிணற்றில் நாளை அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணத்தை கவனத்திற்கொண்ட நீதவான் இன்று புதைகுழி அமைந்துள்ள பகுதியில் இருந்ததாகக் கூறப்பட்ட கிணற்றை அடையாளப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதற்கமைய, பொலிஸார் மற்றும் நில அளவையாளர் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் நேற்றைய தினம் கிணறு அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து தடயங்கள் அழிந்து போகாமல் கிணற்றினதும், புதைகுழியை அண்மித்த பகுதியிலுள்ள வீதியினதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டிருந்தார்.

கடந்த வருடம் அந்த பகுதியில் நீர்க்குழாய்களைப் பொருத்துவதற்கான அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால் அந்த இடத்தில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் அந்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், 80 க்கும் அதிகமானோரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.