ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட மெயில் சேவையை அறிமுகப்படுத்தியது கூகுள்

ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட மெயில் சேவையை அறிமுகப்படுத்தியது கூகுள்

ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட மெயில் சேவையை அறிமுகப்படுத்தியது கூகுள்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2015 | 2:54 pm

பல்வேறு தொழில்நுட்ப சாதனைகளுக்கு சாட்சியாக விளங்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தகவல் தொழிநுட்பத்துறை நாளொரு மாற்றமும், பொழுதொரு வளர்ச்சியுமாக இறக்கை கட்டி பறந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும்.

அதிலும், குறிப்பாக இணையத்தள தேடுபொறியில் (சேர்ச் என்ஜின்) ஜாம்பவானாக விளங்கி வரும் கூகுள் நிறுவனம், காலமாற்றத்துக்கு தக்கவாறு தனது சேவைகளை மேம்படுத்தி வருவதில் தலைமை இடத்தில் உள்ளது.

‘ஜி-மெயில்’ எனப்படும் இணையவழி கடித பரிமாற்ற சேவையை பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய கூகுள், சமீபத்தில், அனுப்பப்பட்ட மெயில்களை பெறுபவரின் பார்வைக்கு போகும் முன்னர் திரும்பப் பெறும் (undo send) பொத்தானை அறிமுகப்படுத்தியது. இந்த வசதி நாம் மெயிலை தட்டிவிட்ட சுமார் 30 வினாடிகள் வரை கிடைக்கும்.

இதன்மூலம், திடீர் மனக்கசப்பினால் பரிமாறப்பட்ட சில செய்திகளை அனுப்பியவரே பின்னர் நீக்கிவிடும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது, ஒருபடி மேலே சென்று ‘ஆயுள் நிர்ணயிக்கப்பட்ட மெயில்’ சேவையை ஜி-மெயில் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘Dmail’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சேவை மூலம், நாம் யாருக்கு ஒரு முக்கிய தகவலை அனுப்புகிறோமோ, அவரது கணனியில் நாம் இங்கிருந்து குறிப்பிடும் நேரம் வரை மட்டும் இந்த ‘டிமெயில்’ தென்படும்.

உதாரணமாக 10 நிமிடம், 30 நிமிடம், ஒருமணி நேரம், 12 மணி நேரம், 2 நாள், ஒரு வாரம், ஒரு மாதம், என ‘டைம் செட்டிங்’ மூலம் இரகசிய தகவல்களை இந்த சேவை மூலம் நாம் பரிமாறிக் கொள்ளலாம்.

நாம் குறிப்பிடும் நேர நிர்ணயத்துக்கு பின்னர் இந்த மெயிலில் உள்ள தகவல்கள் தானாகவே மாயமாகி விடும். முக்கிய வங்கிக் கணக்குகளின் கடவுச்சொற்கள் (பாஸ்வேர்ட்) போன்ற தலையாய இரகசியங்களை இவ்வகையில் ‘டிமெயில்’ தகவல்களாக அனுப்பி வைக்கலாம் என்பது, குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்ற மெயில்களை இன்னொரு நபருடன் பரிமாறிக் கொள்ளும் ‘போர்வர்ட்’ (forward) வசதிக்கு தடை விதிப்பது தொடர்பாகவும் கூகுள் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுபோன்ற ‘டிமெயில்’ தகவல்களை நீங்கள் யாரிடம் இருந்தும், எந்த இணையம் வழியாகவும் உங்களது ஜிமெயில் இன்பாக்ஸ் வழியாக பெற முடியும்.

ஆனால், மற்றவர்களுக்கு நீங்கள் ‘டிமெயில்’ அனுப்ப வேண்டுமானால், கூகுள் குரோம் அல்லது ஜிமெயில் வழியாக மட்டுமே பரிமாறிக் கொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்