ராஜிவ் கொலை வழக்கு: குற்றவாளிகளின் விடுதலைக்கான தடை நீக்கம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ராஜிவ் கொலை வழக்கு: குற்றவாளிகளின் விடுதலைக்கான தடை நீக்கம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ராஜிவ் கொலை வழக்கு: குற்றவாளிகளின் விடுதலைக்கான தடை நீக்கம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 6:13 pm

இந்திய முன்னாள் பிதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைக்கான தடையை நீக்குவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானத்தை ஆட்சேபித்து இந்திய மத்திய அரசாங்கம் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த வழக்கில் இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போதைக்கு மாற்ற விரும்பவில்லை என்றும் ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரின் விடுதலைக்கான தடையை நீக்க முடியாது எனவும் அறிவித்துள்ளனர்.

அத்துடன், ஆயுள் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையென இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிப்பதற்கான மாநில அரசுகளுக்குள்ள அதிகாரத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென தமிழக அரசு சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் இதன்போது வலியுறுத்தினர்.

இதன்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா அல்லது மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரம் உள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழாம் கடந்த வருடம் அறிவித்திருந்தது.

முன்னதாக கருணை மனுக்கள் மீது இந்திய குடியரசுத் தலைவர் தாமதமாக முடிவெடுத்தார் எனும் அடிப்படையில் 15 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை அடுத்து ஆயுள் தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்