மேர்வின் சில்வா களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா

மேர்வின் சில்வா களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா

மேர்வின் சில்வா களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 10:33 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ராஜபக்ஸ குடும்பத்தின் சதித்திட்டங்களுக்கு உள்ளாகியுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போது கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே மீட்டெடுக்க முடியும் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை உயர்த்தி வைப்பதற்கு செயற்பட்ட சிலரும் பசில் ராஜபக்ஸவும் வேட்பு மனு வழங்கும் செயற்பாட்டை தமது பொறுப்பில் எடுத்து செயற்பட்டமையினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேர்வின் சில்வா ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளரின் வீட்டில் நடைபெற்ற சந்திப்பிற்கு பசில் ராஜபக்ஸ சென்றிருந்தமையை இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் காணக்கிடைத்தமை அதற்கு சிறந்த உதாரணம் என்றும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

ராஜபக்ஸ குடும்பத்தினரை முன்னோக்கிக் கொண்டு வருவதற்காக செயற்பட்ட தமக்கு வேட்பு மனு வழங்காமல் விட்டமைக்கு எவ்வித காரணமும் இல்லை என்றும் மேர்வின் சில்வா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்தமையும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது களனி தொகுதியை தோல்வியடைச் செய்தமையும், அன்னச் சின்னத்தை வெற்றி பெறச் செய்வதற்காக செயற்பட்டமையும் இதற்குக் காரணம் என மேலும் கூறியுள்ளார்.

இந்த அனைத்துக் காரணங்களையும் கருத்திற்கொண்டு களனி தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோருவதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஸ குடும்பம் மற்றும் பல்வேறு கட்சிகளில் உள்ள சதித்திட்டக்காரர்களிடம் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்ட தினத்தில் தான் மீண்டும் அந்தப் பதவிக்கு வருவதாகவும் மேர்வின் சில்வா ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

தனக்கு செய்த அநீதிக்காக தற்போது தப்பித்தாலும் கடவுளிடம் இருந்து தப்பிக்க முடியாது என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்