தாய்ப்பாலூட்டியவாறு வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் பெண் விளக்கமறியலில்

தாய்ப்பாலூட்டியவாறு வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் பெண் விளக்கமறியலில்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 10:37 pm

மாலபே – பிட்டுகல பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸாருக்கும் பெண்ணொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் இன்று வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு முன்பாக ஒரு நபரினால் குறித்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது.

38 வயதான சாமிலா கயானி அமரசிங்க என்ற பெண்ணே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்.

தனது மூத்த மகளை மேலதிக வகுப்பிலிருந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நோக்குடன் மாலபேயிலிருந்து கடுவளை நோக்கி அவர் பயணித்துள்ளார்.

கடுவளை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தனது இரண்டரை வயதுடைய மகளுக்கு தாய்ப்பாலூட்டிய வண்ணம் வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சுமார் 10 நிமிடங்கள் வரை பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தப் பெண், பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டமை, திருட்டு மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தலங்கம பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து, குறித்த பெண்ணை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்பெண்ணுக்கு வாகனத்தை செலுத்த அனுமதி வழங்கியமை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டு, ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரான பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பிலான அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்