சம்பூர் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

சம்பூர் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 8:35 pm

திருகோணமலை சம்பூர் பகுதியில் அரசாங்க தேவைக்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பூர் காணி விவகாரம் தொடர்பான விசாரணை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, உயர் நீதிமன்ற நீதியரசர் ஶ்ரீபவன் மற்றும் நீதிபதிகளான ஈவா வனசுந்தர, ரோஹினி மாரசிங்க ஆகியோர் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளனர்.

சம்பூரில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள், அரசின் தேவைகளுக்கு என சுவீகரிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என அறிவித்திருந்தார்.

இதேவேளை, சம்பூர் பகுதியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக தனியார் நிறுவனமொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்திற்கு தொழிற்சாலையை அமைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் 818 ஏக்கர் காணியை மீண்டும் அரசு கையகப்படுத்தியதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என அறிவித்த உயர் நீதிமன்றம், குறித்த நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக முதலீட்டு சபையே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்