பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2015 | 1:10 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தெஹியோவிட்ட நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 தோட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் தமக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்பித்த மெதுவாக பணியில் ஈடுபடும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலவதியானதை அடுத்து சம்பள உயர்வு தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன.

ஒருநாள் சம்பளத்தை ஆயிரம்ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என இந்த பேச்சுவார்த்தைகளின்போது தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

எவ்வாறாயினும் இந்த கோரிக்கை தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்காததால் நேற்று முன்தினம் முதல் மெதுவாக பணியில் ஈடுபடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தது.

இந்த நிலையில் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பெருந்தோட்டக் கம்பனிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்