அரச நிறுவனங்களில் ரிஷாட் பதியுதீனால் அவசர நியமனங்கள்: தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

அரச நிறுவனங்களில் ரிஷாட் பதியுதீனால் அவசர நியமனங்கள்: தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2015 | 9:15 pm

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில அரச நிறுவனங்களில் நியமனங்கள் வழங்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கு சொந்தமான புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிமவள நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

புதிய நியமனங்கள் வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்ட அழுத்தத்தினால் தாம் நோய்வாய்ப்பட்டதாக அவர் கூறினார்.

புல்மோட்டை கனிமவள நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான அனுலா திலகரத்ன, புதிய நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 50 பேரளவில் வருகை தந்திருந்ததாகவும் அவர்கள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

[quote]கடந்த 5 ஆம் திகதி அமைச்சில் இருந்து தொலைநகல் ஊடாக 50 நியமனக்கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில் எவ்வாறு கையொப்பமிடப்பட்டுள்ளது என தலைவர் என்னிடம் வினவினார். தலைவருக்கு பதிலாக என அதில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக நான் தலைவரிடம் கூறினேன். நான் அவ்வாறு கையொப்பமிடவில்லை என தலைவர் கூறினார். அவ்வாறு கையொப்பமிடப்பட்டுள்ளவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அவர் எனக்குத் தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் புதிய நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக 50 பேரளவில் வருகை தந்திருந்தனர். அவர்கள் தமக்கு நியமனங்களை வழங்குமாறு எனக்கு அழுத்தம் விடுத்தனர். பொலிஸார் வருகை தந்தே என்னை வெளியே அழைத்து வந்தனர். அது உள ரீதியில் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.[/quote]

இந்த நியமனங்கள் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தாம் நோய்வாய்ப்பட்டிருந்ததாக புல்மோட்டை கனிமவள நிறுவனத்தின் தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர் மஹிந்த மொரகொல்லவும் தெரிவித்தார்.

அதில் செயற்பாட்டு பணிப்பாளர் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சின் ஊடாக சிறிது காலத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட சில நியமனங்களுக்கே தாம் கையொப்பமிட்டதாக செயற்பாட்டுப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, புல்மோட்டை கனிமவள நிறுவனத்திற்கு 120 ஊழியர்கள், முறையற்ற வகையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி தற்காலிக ஊழியர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஊழியர் சேவை சங்கம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு அவசரமாக நியமிக்கப்படும் அளவிற்கு குறித்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படவில்லை எனவும், இந்த சம்பவத்தினால் 450 நிரந்தர ஊழியர்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் அகில இலங்கை ஊழியர் சேவை சங்கம் கூறியது.

அவ்வாறான வகையில் நியமனங்கள் வழங்கப்பட முடியாது என தேர்தல்கள் ஆணையாளரினால் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மெஹமட் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்