உணவு விஷமானது: விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்கிறது சின்னமன் கிராண்ட்

உணவு விஷமானது: விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்கிறது சின்னமன் கிராண்ட்

உணவு விஷமானது: விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்கிறது சின்னமன் கிராண்ட்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 3:46 pm

ஜூன் 12 ஆம் திகதி கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உணவருந்தியவர்கள் சுகயீனமடைந்தமை குறித்த விசாரணைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அந்த ஹோட்டல் நிர்வாகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

தமது ஹோட்டலில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதையடுத்து, தாம் பரிமாறிய 67 வகையான உணவு மற்றும் பானங்களின் மாதிரியை பகுப்பாய்விற்கென சுயாதீனமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பி வைத்ததாக சின்னமன் கிராண்ட் ஹோட்டல் நிர்வாகம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இன்று கிடைக்கப்பெற்ற பகுப்பாய்வு அறிக்கையில், பரிமாறப்பட்ட வெண்ணெயின் தரமின்மை காரணமாக, அதனை உட்கொண்டவர்கள் சுகயீனமடைந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து, வெண்ணெய் விநியோகஸ்தர் மற்றும் உற்பத்தியாளர்களின் தரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் இவ்வாறான சம்பவம் எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தமது விருந்தினர்கள் சுகயீனமடைந்த சம்பவமானது, தமது ஹோட்டலில் பரிமாறப்படும் பொருட்களின் தரத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம், அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குறித்த வைபவத்தை ஒழுங்கமைத்திருந்தவர்களுக்கும் சுகயீனமடைந்தவர்களுக்கும் தம்மால் நேர்ந்த அசௌகரியங்களுக்காக வருத்தமடைவதாக அந்த அறிக்கையில் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்