புதிய விமானப்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய விமானப்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 9:15 pm

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்கள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்தார்.

கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அரச தலைவருக்கு அறிவிக்கும் சம்பிரதாயத்தை நிறைவேற்றும் முகமாக புதிய விமானப்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்.

ககன புளத்சிங்கள, இலங்கையின் 15 ஆவது புதிய விமானப்படைத் தளபதியாக பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதியிடம் நினைவுச் சின்னமொன்றையும் வழங்கினார்.

இதேவேளை, சேவைக்காலத்தை நிறைவு செய்து நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் அப்துல் அஸிஸ் அல் ஜமாஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தார்.

பொலன்னறுவை நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்யுமாறு, அந்நாட்டு அரசாங்கம் சார்பில் தூதுவர் இதன்போது ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

இதேவேளை, தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் சுரங்கங்களில் சேவையாற்றிய சந்தர்ப்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமடைந்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

லுணுகல பிரதேசத்தில் சுரங்கமொன்று உடைந்து வீழ்ந்தமை மற்றும் கிலிமலே பிரதேசத்தில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவினால் உயிரிழந்த மற்றும் அங்கவீனமடைந்த ஐவருக்கு இதன்போது இழப்பீடு வழங்கப்பட்டது.

உயிரிழந்த ஒருவரது குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்