தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தீர்க்கப்படவில்லை: பஷீர் சேகுதாவுத் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம்

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தீர்க்கப்படவில்லை: பஷீர் சேகுதாவுத் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 7:57 pm

மூன்று வருடங்கள் கடந்தும் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தீர்க்கப்படாது இருப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமுக்கு கட்சியின் தவிசாளரான பஷீர் சேகுதாவுத் கடிதம் மூலம் நினைவூட்டியுள்ளார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நகர அபிவிருத்திக்குப் பொறுப்பான முன்னாள் ஜனாதிபதிக்கும் அந்த அமைச்சின் முன்னாள் செயலாளருக்கும் எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமையை பஷீர் சேகுதாவுத் நினைவுபடுத்தியுள்ளார்.

தற்போது நகர அபிவிருத்தி அமைச்சராக ரவூப் ஹக்கீம் செயற்படுவதனால் அதனைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளதாக பஷீர் சேகுதாவுத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தம்புள்ளை பள்ளிவாசல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கணக்கில் கொள்ளப்படவில்லை எனவும் பள்ளிவாசலுக்கு மாற்றுக்காணி வழங்கப்படும் என்ற உறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதையும் பஷீர் சேகுதாவுத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சர் பதவியை வகித்தும் இதனை செய்யத் தவறினால் அது சமூகத்திற்கும் கட்சிக்கும் பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்தக் கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் மீண்டும் பூதாகரமாவதைத் தடுக்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு உள்ளது என்பதையும் பசீர் சேகுதாவுத் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

எனவே, அதிகாரத்தில் இருக்கும் காலத்தில் அதனை செய்யத் தவறிவிட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் கையாலாகாதவர்கள் என்ற அவப்பெயரை ஏற்க வேண்டிய கசப்பான உண்மையை உணர்ந்து இந்தப் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவர முயற்சிக்குமாறும் ரவூப் ஹக்கீமை தனது கடிதத்தின் மூலம் பஷீர் சேகுதாவுத் கோரியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்