கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்புப் பண்ணையால் குடிநீருக்கு பாதிப்பு: மக்கள் கண்டனப் பேரணி

கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்புப் பண்ணையால் குடிநீருக்கு பாதிப்பு: மக்கள் கண்டனப் பேரணி

எழுத்தாளர் Bella Dalima

17 Jun, 2015 | 9:06 pm

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையிலுள்ள இறால் வளர்ப்புப் பண்ணையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கக்கூடாது என வலியுறுத்தி இன்று கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இறால் வளர்ப்பு பண்ணையின் செயற்பாடுகள் காரணமாக மகிழடித்தீவு, முதலைக்குடா, தாழையடித்தெரு, படையாண்டவெளி, பண்டாரியாவெளி கிராமங்களின் குடிநீர் உவர்த்தன்மையடையும் என மக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, சூழலுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மகிழடித்தீவு சந்தியில் ஆரம்பமான இந்த கண்டனப் பேரணி, பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை சென்றதுடன், பிரேதச செயலாளரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த கண்டனப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, 2012 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி சன்டே லீடர் பத்திரிக்கை இந்த விடயம் தொடர்பி செய்தி வெளியிட்டிருந்தது.

கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையை ஆக்கிரமித்தமை தொடர்பில், அவ்வேளையில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த நிறுவனத்தில் மூன்றில் ஒரு வீத பங்குகளைப் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி முறையற்ற விதத்தில் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக சண்டே லீடர் பத்திரிக்கை வெளியிட்டிருந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்