பாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் பொங்கல் வழிபாடு

பாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் பொங்கல் வழிபாடு

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 5:02 pm

25 வருடங்களின் பின்னர் இன்று யாழ்ப்பாணம், பாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் மக்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட இந்த ஆலயத்திற்குச் செல்ல
பிரதேச மக்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இன்று தமது ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கண்ணீர் மல்க மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் பாலாலி வசாவிளான் தெற்கு பகுதி 1990 ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்த ஞான வைரவர் ஆலயம் எவ்வித பராமரிப்புகளும் இன்றி காணப்பட்டது.

இந்நிலையில், ஆட்சிமாற்றத்தினைத் தொடர்ந்து குறித்த ஆலயத்திற்கு செல்வதற்கு மக்கள் அனுமதி கோரியிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, 25 வருடங்களின் பின்னர்
வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படும் பொங்கல் வழிபாடுகளில் பிரதேச மக்கள் இன்று கண்ணீர் மல்க ஈடுபட்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமது சொந்த இடத்திற்குச் சென்றமை மகிழ்ச்சியளிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், விரைவில் தமது பிரதேசத்தில் தம்மை குடியமர்த்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்