கரையோர மாவட்டக் கோரிக்கையை நிவர்த்தி செய்து தருமாறு ஜனாதிபதிக்கு பஷீர் சேகுதாவூத் கடிதம்

கரையோர மாவட்டக் கோரிக்கையை நிவர்த்தி செய்து தருமாறு ஜனாதிபதிக்கு பஷீர் சேகுதாவூத் கடிதம்

கரையோர மாவட்டக் கோரிக்கையை நிவர்த்தி செய்து தருமாறு ஜனாதிபதிக்கு பஷீர் சேகுதாவூத் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2015 | 6:16 pm

முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக பெற்றுக்கொடுக்க முன்வருமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியை பிரதமர் மற்றும் ஊடகங்களுக்கும் பஷீர் சேகுதாவூத் அனுப்பி வைத்துள்ளார்.

கரையோர மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றத் தாமதமானால் குறைந்தபட்சம் தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளை உள்ளடக்கிய முழு அதிகாரம் கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் பணிமனையையாவது நிறுவித் தருமாறு பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

கிழக்கு மாகாண தமிழர்களின் பிரதான கோரிக்கையான சம்பூர் காணிப் பிரச்சினை தொடர்பில் காட்டிய கரிசனைக்காக ஜனாதிபதிக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அம்பாறை கரையோர மாவட்டத்திற்கு முன்னோடியாக முழு அதிகாரம் பொருந்திய மேலதிக அரச அதிபர் பணிமனையை ஸ்தாபிப்பதற்கான பொருத்தக் கடிதத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்குவதற்கு தயார் நிலையில் இருந்ததாக பஷீர் சேகுதாவூத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும், தமது இரண்டு அமைச்சுப் பதவிகளையும் இராஜினாமா செய்து அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகவிருந்த மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சி மாவட்டமும் கல்முனை மாவட்டமும் உருவாக்கப்படுவதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு சிபாரிசு முன்வைத்திருந்த போதிலும் 1982 இல் கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே உருவாக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் உதாசீனப்படுத்தப்பட்டதாக பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் குளியாப்பிட்டி மாவட்டம், மஹியங்கனை மாவட்டம், அம்பாறை கரையோர மாவட்டம் என மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்க முன்வந்தபோதிலும் இறுதியில் அது நிறைவேறாமல் போனது கவலைக்குரியதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பின்னர், 2003 இல் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சியின் பயனாக நிக்கவெரட்டிய மாவட்டம் அம்பாறை கரையோர மாவட்டம் என்பவற்றுக்கான அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனபோதிலும் அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போயிருப்பது குறித்து அம்மாவட்ட முஸ்லிம் மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பஷீர் சேகுதாவூத் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்