இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரைக் காணவில்லை

இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரைக் காணவில்லை

இராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரைக் காணவில்லை

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2015 | 4:31 pm

இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.

மீன்பிடிப்பதற்கான தடைக்காலம் நிறைவுபெற்றதை அடுத்து, கடந்த மாதம் 29 ஆம் திகதி 5000ற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாக எமது இராமேஸ்வரம் செய்தியாளர் கூறினார்.

இவ்வாறு கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி மீண்டும் கரைக்குத் திரும்புவது வழக்கம் என்ற போதிலும், இரண்டு படகுகளில் சென்ற 9 மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து காணாமற்போன மீனவர்களைத் தேடுவதற்கான நடவடிக்கைகளில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ள போதிலும், கடும் காற்று காரணமாக அந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைதான இந்திய மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்