மண்டூரில் இடம்பெற்ற சமூக சேவை உத்தியோகத்தரின் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

மண்டூரில் இடம்பெற்ற சமூக சேவை உத்தியோகத்தரின் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2015 | 1:35 pm

மட்டக்களப்பு, மண்டூர் பகுதியில் சமூக சேவை உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் விரிவுபடுத்தியுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் P.T. சிசிரவின் கண்காணிப்பின் கீழ் விசேட பொலிஸ் குழு இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்பிரகாரம் சம்பவ இடத்தில் நேற்று (28) நடத்தப்பட்ட தீவிர சோதனையை அடுத்து, அங்கிருந்து வெற்றுத் தோட்டா ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

வெற்றுத் தோட்டாவை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சமூக சேவை உத்தியோகத்தரை சுட்டுக் கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் ரகத்தை கண்டறிய முடியுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று வெள்ளாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள சமூக சேவை உத்தியோகத்தரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த அடையாளம் தெரியாத இருவர், அவரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்