க.பொ.த சாதாரணதர மாணவர்களிடமிருந்து பூரணப்படுத்தப்படாத அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள்

க.பொ.த சாதாரணதர மாணவர்களிடமிருந்து பூரணப்படுத்தப்படாத அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள்

க.பொ.த சாதாரணதர மாணவர்களிடமிருந்து பூரணப்படுத்தப்படாத அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2015 | 8:43 am

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

சுமார் நான்கு இலட்சம் வரையான பரீட்சார்த்திகளின், தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில் டிசம்பர் மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் சிரமம் ஏற்படலாம் என திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவிக்கின்றார்.

ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியன்று 16 வயதைப் பூர்த்திசெய்யும் பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆயினும் சுமார் இரண்டு இலட்சத்து 25,000 வரையான விண்ணப்பங்களே கிடைத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதேவேளை, கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களில் அதிகளவான குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறிப்பாக பல விண்ணப்பங்களில் பாடசாலை அதிபர்கள் கையொப்பமிட்டுள்ளபோதிலும், அவர்களின் உத்தியோகபூர்வ முத்திரை பொறிக்கப்பட்டிருக்கவில்லை என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் கூறுகின்றார்.

இதுவரை சுமார் 2500 க்கும் அதிகமான விண்ணப்பங்களில் குறைபாடுகள் நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்