உள்நாட்டு சட்டத்தை மீறியே ரோஹிஞ்சா முஸ்லிம்கள் புகலிடம் கோருவதாக மியன்மார் குற்றச்சாட்டு

உள்நாட்டு சட்டத்தை மீறியே ரோஹிஞ்சா முஸ்லிம்கள் புகலிடம் கோருவதாக மியன்மார் குற்றச்சாட்டு

உள்நாட்டு சட்டத்தை மீறியே ரோஹிஞ்சா முஸ்லிம்கள் புகலிடம் கோருவதாக மியன்மார் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

29 May, 2015 | 8:39 pm

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்ந்தும் நிர்க்கதியான நிலையில் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

மியன்மாரில் ஒதுக்கப்பட்ட இனமாக வாழ்ந்துவரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்களின் சுய உரிமைகளுக்காக அந்நிய நாடுகளில் பிரஜாவுரிமை கோரி ஆபத்தான கடல் பயணங்களில் சமீப காலமாக ஈடுபட்டுவருகின்றனர்.

தெற்காசியக் கடலில் ஜல சமாதியான எண்ணற்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒரு தரப்பினராக ரோஹிஞ்சா முஸ்லிம்களும் காணப்படுகின்றனர்.

மியன்மார் இராணுவ அரசாங்கம் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இன ஒடுக்குமுறையே அந்த மக்கள் அந்நிய நாடுகளில் புகலிடம் கோருவதற்கான காரணமாகவுள்ளது.

2600 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அடைக்கலமின்றி நடுக்கடலில் படகில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தெற்காசிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக ஆராயும் பிராந்திய நாடுகளின் கலந்துரையாடல் தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்றது.

அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியன்மார் பிரஜைகளாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் கோரினர்.

எனினும், அதற்கு மறுப்புத் தெரிவித்த மியன்மார் ஆட்சியாளர்கள், உள்நாட்டு சட்டத்தை மீறியே வெளிநாடுகளில் புகலிடம் கோரும் செயற்பாடுகளில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டினர்.

மியன்மாரில் சுமார் 1.3 மில்லியன் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வாழ்ந்துவருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பௌத்த நாடான மியன்மாருடனான உறவுகளை முறித்துவிட்டு ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு மற்றொரு பௌத்த நாடு என்ற ரீதியில் அடைக்கலம் கொடுப்பதில் சிக்கல் உள்ளதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக தஞ்சம் வழங்கி இந்தோனேஷியாவும் மலேசியாவும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை அரவணைத்தாலும் நிரந்தரமாக புகலிடம் கோரி இன்னொரு தேசத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை ரோஹிஞ்சா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளமை கவலைக்குரியதே.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்