வித்தியாவைக் கொன்ற கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வேண்டும் – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

வித்தியாவைக் கொன்ற கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வேண்டும் – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

எழுத்தாளர் Bella Dalima

27 May, 2015 | 8:52 pm

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகளும், ஆசியர்களும் வித்தியாவின் படுகொலைக்கு நீதிகோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

பாடசாலை வளாகத்தில் மிக அமைதியாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் மாணவ சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் கோஷங்களுடனான சுலோகங்களை மாணவிகள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, வித்தியாவைக் கொடூரமாகக் கொன்ற கயவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருகோணமலை கிளிவெட்டி பாரதிபுரம் மகளிர் அமைப்பு, கிராம அபிவிருத்தி மன்றம் என்பவற்றுடன் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம் மற்றும் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களால் இன்று கண்டன அமைதிப் பேரணியும் நடத்தப்பட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்