இந்திய அணித்தலைவராக ரோஹித் சர்மா?

இந்திய அணித்தலைவராக ரோஹித் சர்மா?

இந்திய அணித்தலைவராக ரோஹித் சர்மா?

எழுத்தாளர் Staff Writer

27 May, 2015 | 9:42 am

ஐபிஎல் 8 போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் தலைவர் ரோஹித் சர்மா, சிறந்த அணித்தலைவராக வளர்ச்சி பெற்றிருப்பதாக சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்துள்ளார்.

“மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக அவர் செயற்பட தொடங்கியது முதல் இப்போது அவர் இருக்கும் நிலை வரை ஒப்பிட்டால், இன்று அவர் நிச்சயம் வளர்ச்சியடைந்த ஒரு அணித்தலைவராக திகழ்கிறார். அவர் இப்போது சிறந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்.

நிறைய பசவால்களை ஒரு கேப்டனாக அவர் எதிர் கொண்டுள்ளார். இந்த சவால்கள் அவரை இன்று சிறந்த கிரிக்கெட் வீரராகவும், வளர்ந்த அணித்தலைவராகவும் கடினமான நபராகவும் மாற்றியுள்ளது.

அவர் திட்டங்களைச் செயல்படுத்திய விதம் குறிப்பாக இந்த சீசனில் அபாரமாக இருந்தது. ஓய்வறையில், வீரர்கள் சந்திப்புகளில் என்னவெல்லாம் திட்டம் தீட்டப்பட்டதோ அவற்றை சிறந்த முறையில் செயல்படுத்தினார் ரோஹித். பந்துவீச்சாளர்கள் அளிக்கும் கருத்துகளைக் கொண்டு ஒரு அணியின் தலைவர் பற்றி நாம் நிறைய கூற முடியும்.

மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நிறைய விஷயங்களை நாம் திட்டமிடலாம், ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் தலைவர், பந்துவீச்சாளர்கள், களத்தடுப்பாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். இந்த விதத்தில் ரோஹித் அருமையாக செயல்பட்டார்.

இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் தோல்வியுடனேயே ஆரம்பித்தனர்.முதல் 4 போட்டிகளிலும் தோல்வியே பெற்றனர். அத்தகைய ஒரு அணி கிண்ணத்தை வெல்வதென்பது இலகுவான காரியமல்ல. அணித்தலைவராக ரோகித் சர்மா சிறப்பாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்லாது ஓட்டக்குவிப்பிலும் சிறந்த வகையில் விளங்கினார்.

அதிரடியாக கணிசமான ஓட்டங்களையும் பெற்றிருந்தார். இவர் மொத்தமாக 482 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சச்சின் பாராட்டியிருப்பதானது ரோகித் சர்மாவிற்கு இந்திய அணியில் நிரந்தரமான இடத்தை வழங்குமென்பதுடன் இந்திய அணியினது தலைவராகவும் இடம்பெறக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே உள்ளதெனலாம்.

இந்தியாவின் தலைவராக விளங்கும் விராத் கோஹ்லியின் தற்போதைய செயற்பாடுகள் சர்ச்சைக்குரியதாக உள்ள நிலையில் ரோகித் சர்மா அணித்தலைவராக நியமிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்