வித்யாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தண்டனை கிடைப்பது எப்போது?

வித்யாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தண்டனை கிடைப்பது எப்போது?

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 7:40 pm

அண்மையில் இடம்பெற்ற வித்யாவின் வன்புணர்வுச் சம்பவம் வரலாற்றில் முதலானதுமல்ல எனினும் இறுதியானதாக அமைய வேண்டுமென்பதே அனைவரதும் மன ஓட்டம்.

இதற்கு முன்னர் அனைவரது நெஞ்சத்தைப் பிளிந்த சம்பவம் இந்தியாவின் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஆறு பேர் கொண்ட குழுவினரால், மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையாகும்.

இந்த கொடூர சம்பவம் முழு உலகையும் இந்தியாவின் பக்கம் திருப்பியது. இன்று இலங்கையின் மீது உலக நாடுகளினது பார்வை திரும்பியுள்ளது.

இந்தியச் சம்பவத்தில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி இந்தியாவின் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயதான மருத்துவக்கல்லூரி மாணவி ஆறு பேர் கொண்ட குழுவினரால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார்.

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, டெல்லி மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய ஆறு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்ததை அடுத்து, கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரும் போராட்டங்கள் மேலும் உக்கிரமடைந்தன. அதன் பலனாக இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அத்துடன் ஐந்தாவது குற்றவாளியான 17 வயது சிறுவனுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திய மக்களின் உணர்வுபூர்வமான போராட்டங்கள் டெல்லி மாணவியின் கொடூர கொலைக்கு நீதியை பெற்றுக்கொடுத்தது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

இவ்வகையான சம்பவங்களுக்கு இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல.

1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் செம்மணியில் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டார்.

அடுத்ததாக 1997 ஆம் ஆண்டு டிசம்பர் கோணேஸ்வரி முருகேசப்பிள்ளை அம்பாறையில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

மேலும் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் புங்குடுதீவில் சாரதாம்பாள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இவற்றுடன் மாத்திரம் இவை நின்று விடவில்லை.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் இளையதம்பி தர்சினி புங்குடுதீவில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு மார்ச் நெடுந்தீவில் 13 வயதான சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் யாழ்ப்பாணம், மண்டைதீவில் நான்கு வயதுச் சிறுமி பாலியல் வன்புர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் யாழ்ப்பாணம் புத்தூரில் 27 வயதான மைதிலி
என்ற யுவதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் யாழ். குருநகரைச் சேர்ந்த ஜெரோமி கொன்சலிற்றா பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி வன்னி மன்னகுளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி
சரண்யா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை.

இறுதியாக 2015 ஆம் ஆண்டு மே புங்குடுதீவில் இடம்பெற்ற வித்யாவின் பாலியல் வன்புணர்வு படுகொலை. 17 வயதான வித்யா 9 பேர் கொண்ட குழுவினரால், கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகாலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கொலையை கண்டித்து தொடர்ந்தும் பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருகின்றன.ஆனால் இவை உரிய நீதியை பெற்றுக் கொடுக்குமா என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்