படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்ப உறவினர்களை ஜனாதிபதி இன்று சந்தித்தார்

படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்ப உறவினர்களை ஜனாதிபதி இன்று சந்தித்தார்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 9:12 pm

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசேட நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (26) திடீர் விஜயம் மேற்கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, 17 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று (26) சந்தித்தபோதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை, விளையாட்டு மைதானங்கள் இல்லாமை,ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு விடயங்களை மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுள்ளனர்.

பின்னர் வடமாகாண ஆளுநர் இல்லத்தில் வித்யாவின் குடும்ப உறவினர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பங்களில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பிரதியமைச்சர் விஜேகலா மகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன் போது வடமாகாணத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு வடமாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி போதாமை குறித்தும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாக விகாரைக்கு சென்ற ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்