கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியதாக கருதப்படுவர்: சுகாதார அமைச்சு

கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியதாக கருதப்படுவர்: சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2015 | 8:36 pm

நாடு முழுவதும் இன்றைய தினம் பணிப் பகிஷ்கரிப்பிற்காக சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் சுகாதார சேவையை கைவிட்டு சென்றவர்களாக கருதப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஊழியர்கள் தொடர்பில் விரைவில் ஒழுக்காற்று நடவடிக்ககை எடுக்கப்படும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத அனைத்து தற்காலிக மற்றும் அமைய ஊழியர்கள் சேவையிலிருந்து விலகியதாகக் கருதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக்கு சமூகமளிக்காத எந்தவொரு ஊழியரும் சுகாதார நிறுவனங்களில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாமென அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்காக அடுத்தமாதம் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில், ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியிலேயே ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுமார் 40,000 சுகாதார ஊழியர்கள் இன்று (26) காலை ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுவசேவா சங்கம் தெரிவித்துள்ளது.

30 தரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சமந்த கோரளே ஆராச்சி குறிப்பிடுகின்றார்.

தமது 10 கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையே பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, சுகாதார ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, நாட்டின் பெரும்பாலான வைத்தியசாலைகளில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ் பெஸ்ட்டுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலைமையின் கீழ், வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 300 இற்கு அதிகமான படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்