புங்குடுதீவு மாணவி கொலை: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

புங்குடுதீவு மாணவி கொலை: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

புங்குடுதீவு மாணவி கொலை: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 6:41 pm

புங்குடுதீவு மாணவி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களிடையே ஏற்படுத்தியுள்ள கோபம், ஆதங்கம் மற்றும் அனுதாபம் ஆகியன இவ்வாறானதொரு சம்பவம் இனி எவருக்கும் ஏற்பட இடமளிக்கப்படாது என்பதை தெளிவுபடுத்துவதாக வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும், வலுவான சட்டங்களோடு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வீ ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை தப்பவிடாது அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, முன்மாதிரியான, கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

பாடசாலை மாணவிகளை பெற்றோர்கள் இனிமேல் தனியாக அனுப்புவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் மாலைநேர மற்றும் மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்யும்போது பெற்றோருடன் இணைந்து, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனவும் வீ. ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்ப் பெண்கள், தமிழ்ப் பகுதிகளில் பகலில் கூட தனியாக நடமாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனவும், இதுவே கடைசியாக இருக்க வேண்டுமெனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்