புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம்; தொடர்ந்து வெளிவரும் உண்மைகள்

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம்; தொடர்ந்து வெளிவரும் உண்மைகள்

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம்; தொடர்ந்து வெளிவரும் உண்மைகள்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2015 | 1:07 pm

புங்குடுதீவு மாணவியின் உயிர், காமுகர்களால் பறிக்கப்பட்டு இன்றுடன் ஒருவாரம் கடந்துவிட்டது.

கடந்த 13 ஆம் திகதி புதன்கிழமை காலை பாடசாலைக்கு புறப்பட்ட வித்தியா, மீண்டும் வீடுதிரும்பப்போவதில்லை என்பதை அவரது குடும்பத்தார் அறிந்திருக்கவில்லை.

பாடசாலை செல்லும் வழியில் காத்திருந்த காமுகர்கள் அவரைக் கடத்திச் சென்று கும்பலாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாடசாலை சென்ற மகளை எதிர்ப்பார்த்து வழிமீது விழிவைத்துக் காத்திருந்த வித்தியாவின் தாயாருக்கு அன்றைய தினம் மாலையே பேரதிர்ச்சிகாத்திருந்தது.

சூரிய அஸ்தமனத்திற்கு பின்னரும் வீடு திரும்பாத மகளை தேடி பொலிஸாரிடம் முறையிட்டு உறவினர்களுடன் இணைந்து தேடுதலை ஆரம்பித்தார்.

மறுநாள் பொழுதுவிடிந்தும் தேடுதலை மேற்கொண்டவர்களுக்கு பற்றைக் காட்டினுள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த வித்தியாவின் சடலமே கண்ணிற்பட்டது.

18 வயதேயான வித்தியாவின் சற்றும் எதிர்பாராத பிரிவால் துடித்த அவரது தாயாரின் வாக்குமூலம் பொலிஸார் சந்தேகபர்களை கண்டுபிடிப்பதற்கான ஆதாரமாக அமைந்தது.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 30, 34 மற்றும் 40 வயதான மூன்று சந்தேகபர்களை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைகளின்போது பொலிஸாருக்கு மேலும் பல முக்கிய தகவல்கள் தொடர்பான துப்புக்கள் துலங்கின.

இந்த துப்புக்களுக்கு அமைய விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் குறிக்கட்டுவானிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகியிருந்த மேலும் ஐந்து சந்தேகபர்களை கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் வித்தியா கும்பலாக பாலியல் வன்புணர்ச்சிக்கு உற்படுத்தப்பட்டமை உறுதியாகியது.

யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் யூ.மயூரதனும் அதனை உறுதிப்படுத்தினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல் மூன்று சந்தேகநபர்களும் நாளை(21) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய ஐவரும் ஜூன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேகநபரும் வெள்ளவத்தை பொலிஸாரால் நேற்று(19) கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் முகமாக எமது அலுவலக செய்தியாளர் பொலிஸ் ஊடகப் பேச்சாளரை தொடர்பு கொண்ட வேளையில் :

கேள்வி : யார் இந்த ஒன்பதாவது சந்தேகநபர்?

பதில் : இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் அங்கிருந்து தப்பிவந்து கொழும்பில் மறைந்திருப்பதாக பரவலாக பேசப்பட்டது. சந்தேகபர் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விடுதியொன்றில் அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் புங்குடுதீவைச் சேர்ந்தவர் என்பதுடன் சுவிட்சர்லாந்தில் தொழில்புரிபவர் என்பது தெரியவந்துள்ளது இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகபர் ஒருவருடைய சகோதரருமாவார். சந்தேகநபர் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கேள்வி : கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தடயப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவா? சந்தேகபர்கள் சிலரது வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதில் : பிரதேச மக்கள் சந்தேகபர்களின் மூன்று வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது, இதில் ஒரு வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
கொல்லப்பட்ட மாணவியின் மூக்குக் கண்ணாடியும், தோடுகளும் சந்தேகபர் ஒருவரது வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததது. எனினும் அந்த வீட்டையே பிரதேச மக்கள் தீவைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மிகவும் முக்கியமான தடயமொன்றை கண்டுபிடிக்க முடியாமற்போயுள்ளது. அவற்றை கண்டுபிடிப்பதற்கான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.

கேள்வி : விசாரணைகளின் புதிய முன்னேற்றம் என்ன?
பதில் : இந்த கொலையை கண்டித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அறியக்கிடைக்கினறது. எவ்வாறாயினும் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவின்பேரில் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்துவதற்காக அந்தப் பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

வித்தியாவின் கொலை சம்பவத்தின் பின்புலத்தில் புதைந்துள்ள மர்மங்கள் என்ன? நியூஸ் பெர்ஸ்ட் தொடர்ந்தும் விழிப்புடன்…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்