புங்குடுதீவு மாணவியின் மரணத்திற்கு நீதி கோரிய ஆர்ப்பாட்டங்களால் வட பகுதி ஸ்தம்பிதம்

புங்குடுதீவு மாணவியின் மரணத்திற்கு நீதி கோரிய ஆர்ப்பாட்டங்களால் வட பகுதி ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 9:57 pm

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களால் வட மாகாணம் இன்று ஸ்தம்பித்திருந்தது.

இதுபோன்ற செயல்கள் இனியும் இடம்பெறக்கூடாது எனவும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை குற்றமிழைக்க அஞ்சும் வகையில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களால் குடா நாட்டின் பெரும்பாலான பகுதிகள் முடங்கின.

இதனிடையே யாழ். நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று பகல் அமைதியின்மை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் கொழும்பில் கைதான சந்தேகநபர் யாழ். நீதவான் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டபோது கொதித்தெழுந்த மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

நிலைமை அத்துமீறி செல்வதை அவதானித்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.

அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 127 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதே இந்த மக்களின் கோரிக்கையாகும்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

சாவகச்சேரி நகரிலிருந்து ஆரம்பமான இந்தக் கண்டனப் பேரணி கண்டி வீதி ஊடாக கொடிகாமத்தை சென்றடைந்தது.

இதற்கு ஆதரவாக கடைகள் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி சுண்டிக்குளம் சந்தியில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விசுவமடு வரை நீடித்த இந்தப் பேரணியில் விசுவமடு மகா வித்தியாலய மாணவர்களுடன் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி பளை பிரதேச விளையாட்டு கழகங்களின் இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய ஆர்ப்பாட்டம் பளை பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கொடும்பாவி எரிக்கப்பட்டது.

கிளிநொச்சி முறிகண்டி வித்தியாலய மாணவர்களும், மக்களும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி முற்பகல் 10 மணியளவில் பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டப் பேரணி முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்ததை அடுத்து அங்கே பலியான மாணவியான வித்தியாவின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதேவேளை, முல்லைத்தீவில் பல பாடசாலைகளின் மாணவர்கள் இன்று முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை கவனயீர்ப்பு மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாலிநகர் மகா வித்தியாலயம், மாங்குளம் மகா வித்தியாலயம், செம்மலை மகா வித்தியாலயம், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம், விசுவமடு மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயம் என்பன எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தன.

இதேவேளை, மன்னார் மற்றும் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அடம்பன், பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போராட்டங்களில் ஏனைய சில பாடசாலை மாணவர்களும் இணைந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, வவுனியா புதுக்குளம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் வீதியில் இறங்கி தமது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முற்பகல் 11 மணியிலிருந்து 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

செட்டிக்குளம் மகா வித்தியாலயம், பூந்தோட்டம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் உட்பட பல பாடசாலைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனிடையே, திருகோணமலை ஸ்ரீ மாதுமை அம்பாள் வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் இணைந்து பாடசாலையின் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி தண்டனை விதிக்கப்பட வேண்டும், தண்டனையில் தாமதம் இருக்ககூடாது என்பன அவர்களின் வேண்டுகோளாகவுள்ளன.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்