திலித் ஜயவீரவிடம் 20 பில்லியன் இழப்பீடு கோரி மகாராஜா நிறுவனத்தின் தலைவர் கோரிக்கைக் கடிதம்

திலித் ஜயவீரவிடம் 20 பில்லியன் இழப்பீடு கோரி மகாராஜா நிறுவனத்தின் தலைவர் கோரிக்கைக் கடிதம்

திலித் ஜயவீரவிடம் 20 பில்லியன் இழப்பீடு கோரி மகாராஜா நிறுவனத்தின் தலைவர் கோரிக்கைக் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 7:41 pm

வர்த்தகரான திலித் ஜயவீர சார்பாக இரண்டு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி சட்டத்தரணி சமன் சேனாதீர அனுப்பியுள்ள கடிதத்திற்கு, மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன், சட்டத்தரணி ஜீ.ஜீ. அருள்பிரகாசம் ஊடாக பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

திலித் ஜயவீரவின் குற்றச்சாட்டுகள் முழுமையாக எவ்வித அடிப்படையும் அற்றவை என்பதுடன், அவர் சட்ட ரீதியான நடவடிக்கையை முன்னெடுப்பாராயின், 20 பில்லியன் ரூபா இழப்பீட்டினை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஜீ.ஜீ. அருள்பிரகாசம் ஊடாக இன்று மாலை இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமது கட்சிக்காரரான மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாதெனவும் சட்டத்தரணி சமன் சேனாதீரவின் கடிதத்தை ஆராய்கின்ற சட்டத்துறை மாணவரால் கூட அதைப் புரிந்துகொள்ள முடியும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திலித் ஜயவீர சட்டத்தரணி மற்றும் பட்டதாரி தகைமையுடையவர் என அவரின் சட்டத்தரணி குறிப்பிடுகின்றதுடன், அவர்களால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் பின்புலத்தில் வேறு நோக்கம் இருக்கலாம் என்றும் சட்டத்தரணி ஜீ.ஜீ. அருள்பிரகாசம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தமது கட்சிக்காரருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை நீதிமன்ற செயற்பாடுகளை தவறாகப் பயன்படுத்துவதாக அமையும் என்றும் ஆர். ராஜமகேந்திரனின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர். ராஜமகேந்திரனுக்கு எதிராக ஏதேனும் அடிப்படையற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அதனை நீதிமன்றத்தின் ஊடாக ஆட்சேபனைக்கு உட்படுத்தி 20 பில்லியன் ரூபா இழப்பீட்டை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சட்டத்தரணி ஜீ.ஜீ. அருள்பிரகாசம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் தமது கட்சிக்காரருக்கு கிடைக்கவேண்டிய தொகையை அறவிடும் வரை, திலித் ஜயவீரவின் அனைத்து சொத்துகளையும் விற்பதனை இடைநிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலித் ஜயவீரவின் சட்டத்தரணியால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு முழுமையான உரிமை உள்ளதாகவும் சட்டத்தரணி ஜீ.ஜீ. அருள்பிகாசம் மேலும் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்