சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு பிணை மறுப்பு; விளக்கமறியல் நீடிப்பு

சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு பிணை மறுப்பு; விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2015 | 4:34 pm

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன அடுத்தமாதம் 03 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு பிணை வழங்குவதனை நிராகரித்த கோட்டை நீதவான் பிரியந்த லியனகே, அவரின் விளக்கமறியல் உத்தரவை நீடித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் 23 வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு, சஜின் வாஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரால் இரண்டு வாகனங்களின் வர்ணங்கள் சட்டவிரோதமான முறையில் மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 02 வாகனங்கள் சந்தேகநபர் ஆலோசகராக பணியாற்றும் தனியார் நிறுவனமொன்றில் பயன்படுத்தப்பட்டதாகவும் இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

போலி இலக்கத் தகடுடன் வாகனமொன்றை செலுத்தியபோது, அது இராஜகிரிய பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் திவி நெகும திட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த ஜனாதிபதி இணைப்புச் செயலாளரை எதிர்வரும் 03 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஜின் டி வாஸ் குணவர்த்தன ஆலோசகராக பதவி வகிக்கும் பாதுகாப்பு நிறுவனத்திற்காக இந்த சந்தேகநபரால் வாகனமொன்று வழங்கப்பட்டிருந்ததாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன் காரணமாக, இரண்டு சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கக் கூடாதென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.

இதன்பிரகாரம் சந்தேகநபர்கள் இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்