234 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

234 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

234 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 7:43 am

234 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் இந்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும், அவற்றின் காலம் இன்றைய தினம் வரை ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டதாக அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்தார்.

பதவிக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்த பின்னர், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாக அதிகாரங்கள் நகர ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

தேர்தலொன்று நடத்தப்படும் வரை அவர்களே அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக அதிகாரிகளாக செயற்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்படும் விசேட ஆணையாளர்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களினால் கண்காணிக்கப்படுவார்கள் என அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவதற்கான எல்லை நிர்ணய நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒருமாத காலத்திற்குள் வெளியிடப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதற்கமைய தொகுதிவாரி முறைமையின் கீழ் அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான அமைச்சின் செயலாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்