புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் தொடர்பில் மூவர் கைது

புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் தொடர்பில் மூவர் கைது

புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் தொடர்பில் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 May, 2015 | 1:09 pm

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (14) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 30, 34 மற்றும் 40 வயதுகளையுடைய மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் இன்று (15) ஆஜர்படுத்துவதற்கு ஊர்காவற்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்த உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றினுள் இருந்து நேற்று (14) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த மாணவி நேற்று முன்தினம் (13) பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றபோதிலும், பிற்பகல் பாடசாலை விட்டு வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடோன்றினுள் இருந்து யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாணவி கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதன் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவத்தைக் கண்டித்து கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தத்தமது பாடசாலைகளுக்கு அருகிலிருந்து முற்பகல் 11 மணியளவில் மாணவர்கள் கண்டன ஊர்வலமாக சென்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்

பாடசாலை மாணவிகளான தமக்கு ஏற்டுகின்ற சமூக வன்முறைகளைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் வலியுறுத்துகின்றனர்.

கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்