வீட்டின் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் பசறையில் இருவர் பலி

வீட்டின் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் பசறையில் இருவர் பலி

வீட்டின் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில் பசறையில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

13 May, 2015 | 6:56 am

கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பசறை பிபிலேகம பகுதியில் நேற்றிரவு 8.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கற்பாறை சரிந்து வீழ்ந்தபோது வீட்டுக்குள் இருந்த 2 பெண்களும், 8 மாத குழந்தையும் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது 54 வயதான பெண்ணும், 8 மாத குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், 22 வயது பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலையால் 4000 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 20 குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளதால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய, வடமத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களே சீரற்ற வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மன்னார் பிரதான வீதியூடான வாகன போக்குவரத்து எழுவான்குளம் பகுதியில் தடைப்பட்டுள்ளது.

இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டியது அவசியம் என இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்த வருடம் மின்னல் தாக்கம் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இன்றும் அநேகமான பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதால் மக்கள் மின்னல் தாக்கம் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்