புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் – நிமல் சிறிபால டி சில்வா

புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் – நிமல் சிறிபால டி சில்வா

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 6:07 pm

புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலுவான கோரிக்கையின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

தொகுதிவாரி மற்றும் கலப்பு முறைகள் அடங்கிய இந்த முறைமை ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை
பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமைக்கு அமைவாக தேர்தல் முறைமையை
அறிமுகப்படுத்தி, அதன் பிரகாரம் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு விசேட ஆணையாளர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்திருப்பது குறித்து ஊடகவியலாளர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், உள்ளூராட்சி மன்றம் தொடர்பான புதிய தேர்தல் முறைக்கான வர்த்தமானி இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் தாம் அதனை நீடிக்குமாறு கோருவதாகக் குறிப்பிட்டார்.

இடைநடுவே தேர்தலை நடத்துவதை விட அதனை நீடித்து, பொதுத்தேர்தலுக்கு செல்வது சிறந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்