கோட்டாபய கைது செய்யப்படுவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோட்டாபய கைது செய்யப்படுவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 3:01 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரை அவர் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் இருந்து நீதியரசர் புவனேக அலுவிஹாரே இன்று விலகிக்கொண்டார்.

இதற்கமைய, உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் டி ஆப்ரூ ஆகியோரினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி ஒழிப்புப் பிரிவின் ஊடாக, தமது கட்சிக்காரரை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக, கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வர்த்தமானி ஊடாக அமைச்சரவை உபகுழுவொன்றுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வாதிட்டார்.

அவ்வாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அரசியல் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் அமைச்சரவையின் அனுமதியுடன் வெளியிடப்பட்டதுடன், பொலிஸாரினால் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அர்ஜூண் ஒபேசேகர குறிப்பிட்டார்.

கைது செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்காத நிலையில், இவ்வாறான மனு செல்லுபடியற்றது என அவர் வாதிட்டார்.

இடைக்கிடையே ஏற்படும் தேவைக்கு ஏற்ப விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு பொலிஸ் மாஅதிபருக்கு முடியும் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்களை ஆராய்ந்து பார்த்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள், ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி மனு மீதான பரிசீலனை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்தனர்.

மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரையில் கோட்டாபய ராஜபக்ஸவை கைது செய்வதை தவிர்க்குமாறு இதன்போது நீதிமன்றம் உத்தரவிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்