கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கம்; ஐ.பி.எல் இல் விளையாடவுள்ளார்

கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கம்; ஐ.பி.எல் இல் விளையாடவுள்ளார்

கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கம்; ஐ.பி.எல் இல் விளையாடவுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 4:02 pm

கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபை அவரை அணியில் சேர்க்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனால், பீட்டர்சன், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணி சார்பாக விளையாட இந்தியா செல்லவுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் 2 கோடிக்கு கெவின் பீட்டர்சனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. ஆனால், இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்கவேண்டியிருப்பதால் ப்ளேஆஃப் வரை அவர் ஐபிஎல் இல் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 2014 பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட 34 வயது பீட்டர்சன், தற்போது கவுன்டி கிரிக்கெட் தொடரில் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக சர்ரே அணி சார்பில் முச்சதம் அடித்தார். இதனால், பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த சீசனில் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இடம்பெறமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பணிப்பாளர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தெரிவித்துவிட்டார்.

”கடந்த சில மாதங்களாக பீட்டர்சனுக்கும், இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கும் இடையிலான நம்பிக்கை குறைந்து வருகிறது. எனவே, குறுகிய கால நலனுக்காக அவரை அணியில் சேர்ப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்த சீசனில் அவர் இங்கிலாந்து அணியில் இடம்பெறமாட்டார். இரு தரப்புக்கும் இடையே நம்பிக்கை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். முதலில் அந்த நம்பிக்கை வளர வேண்டும். அதன் பின்னரே மற்றதைப் பற்றி பேச முடியும்,” என்று ஸ்ட்ராஸ் கூறியிருப்பது கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பீட்டர்சனால் அடுத்தவாரம் தொடங்கவுள்ள இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது வருத்தத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ளார் பீட்டர்சன்.
”இங்கிலாந்து அணிக்காக மீண்டும் ஆடமுடியாது என்பதை அறிந்து நான் மிகவும் மனம் உடைந்து போயிருக்கிறேன். நம்பிக்கை என்கிற வார்த்தையை முன்வைத்து என்னைத் தெரிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்கள். நம்பிக்கை என்பது இருவழிப்பாதை. நான் அவர்களைச் சந்தித்த அடுத்த அரை மணி நேரத்தில் என்னைப் பற்றிய செய்திகள் வெளியே வந்துவிட்டன. நான் யாரிடமும் சொல்லவில்லை. பிறகு யார் சொன்னார்? என்னை அவர்கள் நம்பவில்லை என்று சொல்கிறார்கள். அவர்களை யார் நம்புவது? முதலில் என் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறவர்கள், அடுத்த வாக்கியத்தில் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் ஆலோசகராக பொறுப்பேற்க சொல்வது எப்படி?’என கேள்வியெழுப்பியுள்ளார் பீட்டர்சன்.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தான் ஐபிஎல் இல் கலந்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் ப்ளேஆஃப் இற்குத் தகுதி பெற அதிகம் வாய்ப்புள்ளதால் பீட்டர்சனின் வரவு ஹைதராபாத் அணிக்கு பலத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்