இந்தியாவிலிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2015 | 9:11 pm

அசாதாரண சூழ்நிலையின் போது நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய, தென்னிந்தியாவிலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் தென்னிந்தியாவிற்கு சென்று, தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த 65 இலங்கையர்களே இன்று மீண்டும் நாடு திரும்பினர்.

இவர்களில் 33 ஆண்களும், 32 பெண்களும் அடங்குவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சென்னை மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களிலிருந்து இன்று முற்பகல் இரண்டு விமானங்களின் மூலம் இவர்கள் தமது பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

தமிழக அகதி முகாம்களில் இவர்கள் சுமார் 25 வருடங்களுக்கு மேல் தங்கியிருந்ததாக சென்னையிலுள்ள நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து இலங்கையை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த இவர்கள், இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்கும் நிகழ்வொன்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, இந்தியாவிலிருந்து இலங்கையை வந்தடைந்தவர்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட மேலும் பல உதவிப் பொருட்களும் கையளிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்