போகோஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற பெண்கள், சிறுமிகளில் 214 பேர் கர்ப்பம்

போகோஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற பெண்கள், சிறுமிகளில் 214 பேர் கர்ப்பம்

போகோஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற பெண்கள், சிறுமிகளில் 214 பேர் கர்ப்பம்

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2015 | 3:03 pm

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போகோஹராம் தீவிரவாத அமைப்பு மேற்கத்திய கல்விக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கு எதிராகவும் போர் தொடுத்து வருகிறது.
பெண்கள் படிக்கக் கூடாது என்று இது தடை விதித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 13,000 பேரை இந்தத் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். ஆண்களைக் கொல்லும் இவர்கள் பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தமது ஆதரவைத் தெரிவித்த போகோஹராம் தீவிரவாதிகள், தங்களது பெயரையும் இஸ்லாமிய மேற்கு ஆப்பிரிக்க மாகாண குடியரசு என்று மாற்றிக்கொண்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சிபோக் என்ற கிராமத்திலிருந்து 200 ற்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகளை இத்தீவிரவாத அமைப்பு கடத்திச் சென்றது உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. உலகம் முழுவதும் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

போகோஹராம் தீவிரவாத அமைப்பு பிடித்துச் சென்று அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை பாலியல் அடிமைகள் போல தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று நைஜீரிய இராணுவம் 234 பெண்களையும், சிறுமிகளையும் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டது. சம்பிசா வனப்பகுதியில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 214 பேர்தான் தற்போது கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 700 பெண்களை தீவிரவாதிகளிடமிருந்து இராணுவம் மீட்டது.

இதுகுறித்து ஐ நா. உணவுத் திட்ட நைஜீரிய செயல் இயக்குநர் பாபாடுன்டே ஓஷோடிமெஹின் லாகோஸில் கூறியதாவது:-

ஏற்கனவே இப்பெண்களுக்கு எச்.ஐ.வி, எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 214 பேர் கர்ப்பிணிகளாக உள்ளனர். சிலருக்கு கரு நல்ல வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. சிலர் தற்போதுதான் கர்ப்பமுற்றுள்ளனர்.

அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதியில் பிறந்தவர்கள் ஆவர். இப்போதுதான் அவர்கள் வெளி உலகையே பார்க்கிறார்கள், என்று கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்