யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில்

எழுத்தாளர் Staff Writer

27 Apr, 2015 | 8:30 pm

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டில் மாணவர் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்த தாக்குதலைக் கண்டித்து யாழ். பல்கலைகழகத்தின் கலைப்பிரிவு மாணவர்கள் இன்று (27) முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இனந்தெரியாத குழுவினரால் சுதுமலை பகுதியில் தமது பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மானிப்பாயில் நேற்றுமுந்தினம் (25) நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த ஒன்பது மாணவர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனந்தெரியாத குழு ஒன்று மாணவர்கள்மீது வாள்வீச்சு நடத்தியுள்ளதுடன் போத்தல் மற்றும் கொட்டான்களால் தாக்கியுள்ளனர்.

இதன்போது மாணவர் ஒருவரது கை வெட்டப்பட்டுள்ளதுடன் இன்னொரு மாணவனுக்கு உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு எதிராக எதிர்வரும் புதன் கிழமை வரை பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாள் வெட்டு கலாச்சாரத்தை இல்லாதொழி! குற்றங்களை தீரவிசாரி! அப்பாவிகள் பலியாடுகளா போன்ற சுலோக அட்டைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சுதுமலை பகுதியில் பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்