மலையக மக்களை அரசுடன் சேர்ந்து இயங்கும் அரசியல்வாதிகள் மறந்துள்ளனர் – ஜே.ஶ்ரீரங்கா

மலையக மக்களை அரசுடன் சேர்ந்து இயங்கும் அரசியல்வாதிகள் மறந்துள்ளனர் – ஜே.ஶ்ரீரங்கா

எழுத்தாளர் Bella Dalima

22 Apr, 2015 | 9:15 pm

உலக பூகோள தினம் நினைவுகூரப்படும் இன்று இப்பூவுலகில் வீடற்று வாழும் இலட்சக்கணக்கான மலையக மக்களை மறந்து விட முடியாது என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

சொந்த நிலமின்றி சொல்லொணாத் துயரம் அனுபவிக்கும் மலையக மக்களை அரசுடன் சேர்ந்து இயங்கும் அரசியல்வாதிகள் மறந்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி மாறுகின்றபோதிலும், அமைச்சர்கள் மாறுகின்ற போதிலும் மலையக மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படாமை கவலைக்குரிய விடயம் என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீரங்கா கூறியுள்ளார்.

மலையகத்தில் சில அரசியல்வாதிகள் தொடர்ந்து அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த போதிலும் மக்களுக்கு சொந்த வாழ்விடங்களை அமைத்துத் தரவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

பூகோள அழிவிற்கு குறிப்பாக மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது அதிகம் பாதிக்கப்படும் மலையகக் குடும்பங்கள் தொடர்ந்து வெயிலிலும் மழையிலும் கூடாரங்களில் வசித்து வருவதைக் கண்டு வேதனைப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மலையக மக்களுக்கு கட்சி பாகுபாடு, இன பேதம் இன்றி அனைவரும் நன்மையடையும் வகையில் வீடுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக நுவரெலியா, கண்டி , ஹட்டன் மாத்திரம் இன்றி கேகாலை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலும் வீடுகளற்று இருக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும் என பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீரங்கா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்